1948ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற போது ஏப்ரல் ஏழாம் திகதியை உலக சுகாதார (நலவாழ்வு) தினமாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 1950ஆம் ஆண்டு முதல் இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்னும் பழமொழி எமது உடல் நலனின் தேவையை பளிச்சென்று விளக்குகிறது. நோய்களின் கூடாரமாகி விட்ட மனிதனுக்கு சொத்துகள் எத்தனை இருந்தாலும் நிறைவு தருவதில்லை. ஆரோக்கிய வாழ்வே அனைவரும் வேண்டுவது. எனவே இத்தினத்தில் 50 முக்கிய சுகாதாரக் குறிப்புகளை யாவரும் சுகவாழ்வு வாழ வேண்டி தர விழைகின்றோம். 1. ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை விடியற்காலையில் செய்து வாருங்கள். உடல் சுறுசுறுப்படையும். நாம் உண்ணும் உணவின் சத்து உடலின் எல்லா இடங்களுக்கும் பரவும். 2. உடற்பயிற்சி செய்வதுடன் உங்கள் உணவுப் பழக்கத்திலும் சிறு மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். பெரும்பாலான உணவு காய்கறிகள் மற்றும் பழங்களாக இருக்கட்டும். மாற்றத்தை விரைவிலேயே உணர்வீர்கள். 3. அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள். விடியற்காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு லீற்றர் தண்ணீர் குடிப்பவர்களை நோய்கள் நெருங்காது. 4. நன்றாகத் தூங்குங்கள். குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் தவறாமல் தூங்குங்கள். மதியம் அரை மணிநேரம் குட்டித் தூக்கம் போடுவதும் உடலுக்கு நல்லது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 5. உடலுக்கு என்னென்ன சத்து தேவையென்பதை அறிந்து உண்ணுங்கள். அதிக கொழுப்பு, எண்ணெய்ப் பொருட்களை தவிர்க்கவும். பல நிற காய்கறிகளில் பல வகை குணங்கள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். 6. உடல் எடையைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதிக எடை இருப்பதாக உணர்ந்தால் அதை கண்டிப்பாகக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். 7. உடல் எடையை உடற்பயிற்சியின் மூலமாகவும், உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலமும் மட்டுமே குறைக்க வேண்டும். பட்டினி கிடப்பதும், மாத்திரைகள் உட்கொள்வதும் ஆபத்தானவை. 8. அளவாக உண்ணுங்கள். இடைவெளிகளில் கொறிப்பதை நிறுத்துவது மிகவும் முக்கியம். உணவு உட்கொள்ளும் முன் சற்று தண்ணீர் குடிப்பது அதிகமாய் உண்பதைத் தடுக்கும். 9. ஆயுர்வேதம் என்னும் பெயரில் விற்கப்படுவதெல்லாம் உடல் நலத்துக்கு நல்லது என்னும் மாயை எம்மிடம் உண்டு. அதை விட்டு விடுதல் நலம். 10. தாய்மை நிலையில் இருப்பவர்கள் உணவுப் பழக்கத்தை மருத்துவர் அனுமதியின்றி மாற்றுதல் கூடாது. 11. ஈரல், கிட்னி போன்றவற்றையும், மாமிச உணவில் தோலையும் தவிர்ப்பது நல்லது. 12. உடல்நலம் சரியில்லாமல் மருந்து உட்கொள்கிறீர்கள் எனில் மருத்துவர் சொல்லும் அளவில் மருந்தை உட்கொள்ளுங்கள். ஒரு வாரம் மருந்து சாப்பிடச் சொன்னால் நோய் குணமானதாய்த் தோன்றினாலும் ஒரு வாரம் சாப்பிடவேண்டும். இல்லையேல் அந்த நோயின் கிருமிகள் முழுதும் அழியாமல் திரும்பவும் வீரியத்துடன் தாக்கக் கூடும். 13. மருந்துகளுக்கு ஏதேனும் எதிர்வினை உண்டா என மருத்துவரைக் கேட்டுத் தெரிந்து கொள்தல் நலம் பயக்கும். 14. எலுமிச்சைச் சாறு உடலுக்கு நல்லது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்தும் அது நம்மைப் பாதுகாக்கும். 15. நன்றாக மென்று உண்பதும், மென் பானங்களைத் (கோக், பெப்சி போன்றவை) தவிர்ப்பதும் அவசியம். 16. மது அருந்துதல், புகை பிடித்தல், மன அழுத்தம் போன்றவை பல்வேறு நோய்களை சம்பாதித்துத் தரும். அவற்றை விலக்குதல் மிகவும் அவசியம். 17. ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று முழுப் பரிசோதனை ஒன்றைச் செய்து கொள்வது பலன் தரும். 18. தினமும் அரை மணி நேரம் நடப்பது உடல் எடை அதிகரிக்காமலும் உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுவதுடன் இதய சம்பந்தமான நோய்கள் வருவதிலிருந்தும் பாதுகாக்கிறது. 19. எதையேனும் எடுக்கக் குனியும்போது உட்கார்ந்து எழுந்து எடுப்பது தசைகளை வலுவாக்கும். முடிந்தவரை உடலிலுள்ள தசைகளுக்கு ஏதேனும் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். 20. வரிசையில் காத்திருக்க நேர்ந்தால் ஒரு காலை தரையில் ஊன்றி மறுகாலை அரை அங்குலம் தரைக்கு மேலே தூக்கி நில்லுங்கள். இப்படி மாற்றி மாற்றி செய்வது கால்களை வலுவாக்கும். 21. நட்புடன் கட்டித் தழுவுதல் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். 22. தினமும் அவ்வப்போது ஐந்து நிமிட நேரம் மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிடுங்கள். 23. பழத்தை உண்பதும், பழச் சாற்றை உண்பதும் ஒரே பலன் என்று பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பழத்தை உண்பதே மிகச் சிறந்தது. 24. கார்போஹைதரேட்டுகள் தேவையற்றவை எனும் மாயையை விட்டு விடுங்கள். அது மிகவும் முக்கியமானது! 25. அளவுக்கு அதிகமாய் உண்ணாதீர்கள். உண்பது பசியை அடக்கவே. வயிற்றை அடைக்க அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். 26. எமது ஆரோக்கியத்தில் ஒரு கால்பகுதி மட்டுமே எமது பெற்றோராலும், பரம்பரையாலும் நிர்ணயிக்கப்படுகிறது. மற்றவை எம்மால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். 27. மிச்சமாகிறது என்பதற்காக உண்பது மிகவும் ஆபத்தானது. குறைவாக உண்பதே ஆரோக்கியமானது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 28. மூன்று வேளை வயிறு முட்ட உண்பதை விட அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாய் ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்லது. 29. அதிகாலை வெயிலில் சற்று நேரம் நடப்பது நல்லது. குறிப்பாக முதியவர்களுக்கு அது மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான விற்றமின் டி இதன் மூலம் கிடைக்கிறது. 30. தினமும் சற்று நேரம் உடற்பயிற்சி செய்வது எலும்புகள் வலுவடையவும் உதவும். இது வயதானவர்களுக்கு வரும் எலும்பு உடைவுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும். 31. அருகிலுள்ள கடைகளுக்குச் செல்லும்போதும், அலுவலகம் செல்லும்போதும் எப்போதெல்லாம் நடக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நடவுங்கள். 32. ஓய்வாக இருங்கள். மனதை இலகுவாக்கி, தியானம் போன்ற ஏதேனும் ஒன்றைப் பயிற்சி செய்து பாருங்கள். ஓய்வான மனம் ஆரோக்கியமான உடலைத் தரும். 33. சமூகத்தோடு இணைந்து வாழுங்கள். தனி மரமாய் வாழ்பவர்களை விட மற்றவர்களோடு இணைந்து வாழ்பவர்கள் அதிக காலம் வாழ்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 34. ஆனந்தமாய் இருங்கள். வாழ்க்கை சோகங்களைச் சுமக்கும் கழுதையல்ல, இலட்சியங்கள் ஆனந்தம் தருபவையாய் இருக்கட்டும். 35. மூளைக்கு வேலை தரும் புதிர்ப் போட்டிகள் போன்றவற்றிலும் கவனம் செலுத்துங்கள். அது மூளையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளும். 36. தேவையான தடுப்பு மருந்துகளை சரியான நேரத்தில் போட்டுக் கொள்தல் வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் போடுதலில் அலட்சியம் கூடவே கூடாது. 37. மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட வேண்டும். மனதை ஆனந்தமான நிகழ்வுகளின் பால் திருப்புதல் பயன் தரும். 38. உங்கள் பழக்கவழக்கங்களை மருத்துவர் ஒருவரிடம் சொல்லி உங்களுக்கு வர வாய்ப்புள்ள இன்னல்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்திக் கொள்தல் நலம். 39. உங்கள் உயிரையும், உடலையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். போக்குவரத்து விதிகள் முதல் உணவு விதிகள் வரை கவனமுடன் பின்பற்றுங்கள். 40. உங்கள் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்பதைக் கவனமுடன் கண்காணியுங்கள். அது பலவிதமான நோய்களுக்கு ஆளாக்கி விடும். 41. உடலுக்கு உடற்பயிற்சி கொடுக்கும்போது கண்களுக்கும் பயிற்சி கொடுக்க மறக்காதீர்கள். 42. லிப்ட்டில் பயணிப்பதைத் தவிர்த்து படிகளில் ஏறி இறங்குங்கள். 43. நாய் வளர்ப்பீர்கள் என்றால் அதைக் கூட்டிக் கொண்டு சற்று தூரம் நடக்கலாம். 44. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் பற் தூரிகையை மாற்றுங்கள். 42. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே உணவு உண்பதைத் தவிருங்கள். 43. குழந்தைகள் வீட்டில் இருந்தால் அவர்களுடன் சற்று நேரம் நடனமாடி விளையாடுங்கள். 44. தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழும்புங்கள். 45. வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருங்கள், அல்சீமர் போன்ற நோய்கள் ஓடிவிடும். 46. தினமும் அமைதியாய், மெதுவாய் குளியுங்கள். 47. இரவு உணவை தாமதப்படுத்தாதீர்கள். எட்டு மணிக்கு முன் உண்ணுங்கள். 48. தினமும் ஒரு பழம் உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 49. நார்ச்சத்துள்ள காய்கறிகள், தானியங்கள் என்பவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 50. மன்னிப்பு, பொறுமை, மனிதநேயம் போன்ற உயரிய பண்புகளை மனதில் ஆழமாய்ப் பதியுங்கள். ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தினசரி வாழ்வின் பாகமாக்கிக் கொண்டு வாழ்வோம். ஆரோக்கிய வாழ்வை எமக்கு அளித்து வருகின்ற சுகாதாரத்தைப் பேணுவோம். வாழ்க்கை வாழ்வதற்கே. source:
| |||
Tuesday, April 12, 2011
சுகாதார பழக்கவழக்கங்களை கைக்கொண்டு சுகவாழ்வு வாழ்வோம் _
தமிழனின் ஒரு ஆதங்கம்!
18 வயதான தமிழ் பெண்கள் இரவுநேரக் கேளிக்கை விடுதிகளில்: நாம் எங்கே செல்கிறோம் ?
SUNDAY, 24 JANUARY 2010

அண்மையில் நோர்வே நாட்டின் தலைநகரான ஓசிலோவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். அங்கு நான் வருவதை எப்படியோ அறிந்துகொண்ட எனது மருமகன் எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டான், மாமா உங்க லண்டனில அல்ககோல்(alcohol) எல்லாம் சீப்பாமே ! நல்ல வொட்க்கா(Vodka) இருந்தா ஒருபோத்தல் வாங்கிவாறீங்களா நான் காசு தாரேன். எண்ட நண்பர் கேட்டார் அதுதான். அப்போது நான் உணக்கு எத்தனை வயதடா என்றேன் ? எனக்கு 18 என்றான். அப்ப உன் நண்பனுக்கு எண்டு நான் இழுக்க… அவருக்கு 21 என்று பதில் வந்தது.
நண்பன் தனது வீட்டிற்க்காகத்தான் அதைக்கேட்கிறார் என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக என் மருமகன் கூறியதால், விமான நிலையத்தில் உள்ள டியூட்டி பிரீ ஷாப்பில் அதை வாங்கிச் சென்றிருந்தேன். என்ன தான் இருந்தாலும் என் மருமகன் எனக்கு முன் தண்ணியடிக்க மாட்டான் என்ற அசாதாரண நம்பிக்கை. அது மட்டுமல்ல உண்மையாகவே, மதுபாணங்கள் நோர்வே நாட்டில் மிகக் கூடுதலான விலைக்கு விற்கப்படுவது யாவரும் அறிந்த விடையம் ! அதுவும் நண்பனுக்கு என்று சொல்லுவதால் அதை வாங்கிச் சென்றேன். ஓசிலோ சென்ற நான் எனது வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு பின்நேரம் இளைப்பாற ஹோட்டலுக்குச் சென்றேன். எனது மோபைல் அலறியது.
எனது மருமகன்,…. மாமா வாங்கிட்டு வந்தனீங்களா ? ஓமடா, ஓகே நான் அங்க வந்து எடுக்கிறேன்.. நீங்கள் ஹோட்டலில் நில்லுங்கோ என்றான். பின்னர் திடீரென நீங்கள் தங்கியிருப்பது பெரிய ரூமா மாமா என்றான் ? நானும் ஓம் என்று பதிலழிக்க, சற்றும் தயங்காமல் என்னோடு 2 பிரன்ஸ் வருவினம் ஓகேயா என்றான் ? போத்தலை வந்து எடுத்துச் செல்ல ஏன் இவ்வளவு கூட்டம் என எனக்கு புரியவில்லை, சரி என்றேன். பின்னர் 5 நிமிடம் கழித்து திரும்பவும் போன் செய்த அவன், இன்னும் இரண்டுபேர் வர ஆசைப்படுகினம் என்றான். ஓகே வாருங்கள் வந்து என்னை பார்த்துவிட்டு போத்தலை எடுத்து போங்கள் எனக் கூறினேன்.
சிறிது நேரத்தில் ஹோட்டல் அறைக் கதவு, பலமாக தட்ட களைப்பில் அரை நித்திரையில் இருந்த நான் எழுந்துசென்று கதவை திறந்தால் 3 பெண்கள், அத்தோடு 2 ஆண்கள், அதில் ஒருவர் எனது மருமகன், மற்றையவர் அவர் நண்பராம். பாக்கிஸ்தானைச் சார்ந்தவர் என அவன் அறிமுகப்படுத்த, அப்படியானால் நீங்கள் முஸ்லீமா என நான் கேட்க அவரும் ஆம் என்கிறார். முஸ்லீம்கள் தண்ணியடிக்க மாட்டார்களே என நான் மருமகனிடம் கேட்டேன், இவனுக்காகவா போத்தலை கேட்டாய் என்று கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, இன்னொரு அதிர்சியும் வருகிறது.
அங்கு வந்த 3 பெண்களில் ஒருவர் தனது சூ வை லாவகமாகக் கழற்றி நிலத்தில் வைத்துவிட்டு, கட்டில் மேல் ஏறி, ஒரு பொலித்தீன் பையால், Smoke alarm (சிகரட் பிடித்தால், அலறும் அலாமை) சுற்றி கட்டிக்கொண்டு இருக்கிறாள். அப்போது தான் எனக்கே தெரிகிறது, அவர்கள் எனது அறையில் சிகரட் பிடிக்க உள்ளார்கள் என்று. வெளியே ஒரே குளிர் அதனால் தான் என்று எனக்கு ஒரு சாட்டுப்போக்கைச் சொல்லிவிட்டு, வந்த 3 தமிழ் பெண்களில் இருவர் சிகரட் பிடிக்க, மருமகனும், பாக்கிஸ்தானியும் மற்றப்பக்கமாக தாங்கள் கொண்டுவந்த பையைப் பிரித்து ஏதோ தேட அரம்பித்தனர்.
அப்பா அம்மா எல்லாரும் சுகமா என நான் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, 6 கிளாசை வெளியே எடுக்கிறார் என் மருமகன். அப்படியே சிவரோடு சாத்தி பின்னி பெடல் எடுக்கவேண்டும் போல எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. வளர்ந்து மூன்று இலைவிடவில்லை, வாயில் சிகரெட், அத்தோடு நான் கொண்டுவந்திருக்கும் வொட்காவை(vodka) எனது ரூமில்வைத்து அடிக்க பிளான் ஏற்கனவே போடப்பட்டுள்ளது. என்னையும் ஒரு இளிச்சவாயன் ஆக்கும் அவர்கள் நடவடிக்கையைப் பார்க்க பொறுக்க முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டனர். அதிலும் என்ன நடக்க இருக்கிறது ? இவர்கள் அடுத்து என்ன செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் என்பதை அறிய முற்பட்டேன்.
கோபப்பட்டு பிரியோசனம் ஒன்றும் இல்லை. இவர்கள் வழியில் போய் மொத்தமாக என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவோம் என என் மனம் என்னைத் தூண்டியது.
இவர்களின் இந்தப் போக்கு எங்குபோய் முடிவடையும் ? அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றியே எனது முழுக்கவனமும் இருந்தது. இவர்கள் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தால் அவர்கள் விரைவாக வெளியே போய்விடுவார்கள். அதனால் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று எண்ணி, அவர்களோடு இணைந்து போவதுபோல நானும் நடித்தேன். எனக்கு ஒரு கிளாஸ் வொட்க்கா வார்க்கப்பட்டது, நானோ எனக்கு அல்சர் இருக்கு ஆனபடியால் கனக்க அடிக்க முடியாது என்று கூறி சிறிதளவு பாவித்துக்கொண்டேன்.
நேரம் ஆக ஆக, அவர்கள் ஜந்துபேரும் ஒருவாறாக போத்தலை அரைவாசி காலி பண்ணியதோடு, போதையில் மிதந்தனர். முதலாவதாக பேச ஆரம்பித்த பெண் , தனக்கு தன் அம்மாவை ரெம்பப் படிக்கும் என்றார், நான் எவ்வளவு குடித்துவிட்டு வீடுசென்றாலும் அவ ஒண்டும் கதைக்க மாட்டா, கதவைத் திறந்தால், நிறைய குடிச்சிருக்காய், மணக்குது சரி சரி போய் படு என்று அவ கூறுவாவாம் என்று சொல்லி ஜக்குபாய் படத்தில் வரும் ஸ்ரேஜா சொல்வது போல ஜ லவ் மை மம்மி என்று புராணம் பாடினாள் !! இது இவ்வாறிருக்க, எனது மருமகனோ தனது 16 வயதுடயை காதலி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதாக இன்னும் ஒரு கதையைச் சொல்லி.. காதலாகி கண்ணீர் மல்கினான் !
போதாக்குறைக்கு மற்றைய 3வரும் வேறுவேறு கதைகளை சொன்னார்கள். அப்பாவிடம் இன்று வெள்ளிக்கிழமை ஸ்பெசல் கிளாஸ்(special Class) இருப்பதாக ஒருவர் பொய்சொல்லி வந்திருக்கிறார். மற்றவரோ தான் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று தான் திரும்புவேன் என்று சொல்லிதான் வந்தாராம், குறிப்பாக பெண்கள் எல்லாருமே அப்படிச் சொல்லித்தான் வந்தார்கள் என்றனர். வியப்பில் ஆழ்ந்துபேனேன். எல்லோரின் தாய் தந்தையரையும் நான் இங்கு குறை கூற வரவில்லை என்பதை எமது அன்புள்ள தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும் ! ஆனால் இப்படியும் தாய் தந்தையர் இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இரவில் வயதுக்கு வந்த பெண்களை வெளியே அனுப்புவது தாய் மாருக்கு வயிற்றில் கொள்ளிக்கட்டையை வைத்திருப்பது போல என்று சொல்லுவார்கள் ஊரில்.
ஆனால் அங்கு இருக்க முடியாது என்று இங்கு வந்தால், வெள்ளைக்காரர்கள் செய்ய வெட்கப்படும் சிலவற்றை எமது தமிழ் சமூகம் செய்துவருகிறது அருவருக்கத்தக்க விடையமாகும் !
யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடு, தமிழர் தாயகம் கலாச்சார சீர்கேட்டால் அழிகிறது என பல புலம்பெயர் இணையங்களும், செய்தி ஊடகங்களும் வாய் கிழியக் கத்துகிறதே, நாம் இருக்கும் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை எவராவது திரும்பிப் பார்த்தோமா ? இல்லை எமது பிள்ளைகள் என்ன தான் செய்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தோமா ?
இவை எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு நான் இருக்கும்போதே, அவர்கள் வெளியே கிளம்ப ஆரம்பமானார்கள் ! எங்கு செல்லப்போகிறீர்கள் என்று கேட்டால், இரவு நேர களியாட்ட விடுதிதான் வேறு எங்கு என்று தமிழில் பதில் வந்தது….. நானும் சரி செல்லுங்கள் என்றேன், இனி இவர்களைத் தடுக்கும் சக்தி என்னிடம் இல்லை என்பதை உணர்ந்தவனாய் சொன்னேன். ஆனால் கவனமாகச் செல்லுங்கள் வேற்றின மக்கள் அதிகம் வரும் இடம் என நான் சொல்லி முடிப்பதற்கு முன்னரே, இல்லை இல்லை கனக்க சிறிலங்கன் ஆட்கள், அதிலும் தமிழ் ஆட்கள் அங்க வருவினம் கொஞ்ச நேரத்தில எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் வரும் என்றான் மருமகன்.
அப்போது தான் எனக்கு பொறி தட்டியது. அப்ப ஒரு பெரிய கூட்டமே இதன் பின்னணியில் உள்ளதா ? என சந்தேகப்பட்டு, நானும் வரவா என்று கேட்டேன். முதலில் சிரித்த அவர்கள் பின்னர் ஓகே மாமா வாருங்கோ என்றார்கள். ஒருவாறாக நடந்து சென்று நாம் ஆறுபேரும் களியாட்ட விடுதியை அடைந்தால், நுளைவாயிலில் வைத்து எல்லோரும், பாக்கெட்டில் கைகளை விட்டு காசைத் தேடுவது போல நடிக்க ஆரம்பித்தனர்.
நான் களியாட்ட விடுதிக்கு வராவிட்டால் எப்படியும் இவர்கள் அதற்கு செல்வதற்கான 100 குரோனர்களை கட்டாயம் வைத்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னை கொண்டு அந்த காசைக் கொடுப்பிக்க அவர்கள் போடும் நாடகத்தை நான் அறிந்தும் அறியாதவனாய் ஆறு பேருக்குமாக 600 குரோனர்களை நான் செலுத்தினேன்.
இப்போது உள்ளே நுளைகிறோம், ஒரே இருட்டு ! போதாக்குறைக்கு புகையையும் அடித்து பாட்டுச் சத்தங்கள் காதைப் பிளக்க, கலர் கலர் லைட்டைப் போட்டு கண்களைக் குத்தவைக்கும் அளவுக்கு ஒரு இம்சை ! இது தான் நைட் கிளப் ! ஆடிக்கொண்டு இருக்கும் பெண்கள், அதைப்பார்த்து ரசிக்கும் ஆண்கள். ஆண்பால் பெண்பால் வித்தியாசம் தெரியாமல் கண்டவனையும் கட்டிப்பிடித்து முத்தம்கொடுக்கும் ஒருகூட்டம் ! தாம் மிச்சம் பிடித்த காசில் ஓடிப்போய் பியரை வாங்கி அடிக்க ஆரம்பித்தார் அந்த பாக்கிஸ்தான் நபர்.
ஒரு ஓரமாக நின்று அனைத்தையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த எனக்கு அதிர்சிகள் காத்திருந்தன. நேரம் ஆக ஆக மேலும் மேலும் பலர் கூடி மண்டபமே களோபரமாக இருந்தது. அப்போது அடிக்கடி என்னுடன் வந்து பேசிவிட்டுச் செல்லும் எனது மருமகன் வந்து, இது நதியா, இது சிந்துயா, இது கலா, என பல தமிழ் பெண்களை எனக்கு அறிமுகம் செய்துவைக்கிறான், (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) அறிமுகம் செய்தது போக, செய்யாத தமிழ் பெண்களோடு சேர்த்து சுமார் 25 தமிழ் பெண்கள் அரை குறை உடுப்போடு அங்கு தன்னிலை மறந்து நடனமாடிக்கொண்டு இருந்தனர். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்கள் தானே எனக்கு தெரியவில்லை !
உண்மையைச் சொல்லப்போனால் எதுவும் புரியவும் இல்லை.
தமிழர்களுக்கு ஒரு பாரிய பண்பாடும் எமக்கு என்று ஒரு நாகரீகமும் கொண்டவர்கள் ! வேற்றின மக்களே எம்மைப் பார்த்து வியக்கும் அளவுக்கு சில நல்ல நாகரீகங்களை நடைமுறைப்படுத்தி வருபவர்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்போடு வாழ்பவர்கள். ஆனால் புலம்பெயர்ந்து வாழ்வதால் இவ்வாறு எம்மை நாம் மாற்றிகொள்ள வேண்டுமா ? இது அவசியம் தானா ? தாய் தந்தையர் இப்படியான பிள்ளைகள் மீது சிறிது அக்கறை எடுத்தால் என்ன ? ஒன்றுமே வேண்டாம், புலம்பெயர் நாடுகளில் உள்ள எத்தனை தமிழ் பள்ளிக்கூடங்கள் தமது மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.
கேளிக்கை விடுதிகளுக்கு போகாமல் இருக்க நாம் சொல்லவில்லை. மது பாவித்தால் கூட பரவாயில்லை என்று சொல்லலாம், ஆனால் தமிழ் பெண்கள் சிகரட்டிற்கும் அடிமையாவதா ? பிற்காலத்தில் அவர்கள் மணம் முடிக்கும்போது, கணவனோடு எவ்வாறான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் ? குறிப்பாக பெண்கள் குடிபோதையில் இருக்கும்போதே தமது கற்பை இழப்பதாகவும், அல்லது உடலுறவில் ஈடுபடத் தூண்டுவதாகவும் ஆராட்சிகள் தெரிவிக்கின்றனர். தன் நிலை மறந்து கிடக்கும் பெண்களை, ஆண்கள் தம்வசப்படுத்துவது 89% சாத்தியமாக அமைகிறது. இதன் பின் விளைவுகளை ஏன் பெற்றோர் நினைத்துப் பார்க்க தவறுகின்றனர் ? இப்படியான சூழ் நிலையில் எயிட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்களும் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது.
புலம்பெயர் நாடுகளில் தமிழ் பாடசாலைகளுக்கு வார இறுதியில் சென்று தமிழ் மற்றும் கலைகள் பயின்றுவரும் மாணவர்கள் இவ்வாறான கேளிக்கை, மற்றும் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வது மிகக் குறைவாகக் காணப்படுவதாக நாம் நடத்திய கருத்துக் கணிப்பில் இருந்து தெரியவருகிறது. அத்தோடு அவர்களின் மனம் இசை தொடர்பாகவோ அல்லது பரத நாட்டியம் தொடர்பாகவோ செல்வதால், அல்லது தமிழ் சம்பந்தப்பட்ட கலைகளோடு தொடர்பு இருப்பதால்.. இயல்பாகவே அவர்களுக்கு எது கெட்டது எது நல்லது என்று புரிந்துகொள்கிறார்கள். சிலர் படிப்பில் தமது முழுநேரத்தையும் செலவிடுவதால் இப்படியான கேளிக்கைகளை தவிர்க்கின்றனர்.
தாய் தந்தையருக்கு பொய்சொல்லிவிட்டுச் சிலரும், பாதி உண்மையைக் கூறி மிகுதிப் பாதியை மறைத்துவிட்டு சிலரும், முழுக்க முழுக்க உண்மையைக் கூறிச் சில பிள்ளைகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் களியாட்ட விடுதிகளுக்குச் செல்கின்றனர் என்பதை, நான் லண்டனில் நடத்திய சிறிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளேன். ஆனால் பெற்றோர்களால் தமிழ் பண்பாடு குறித்து சொல்லிவழர்க்கப்பட்ட பிள்ளைகளும், தமிழ் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளில் கணிசமானோர், மேற்கத்தைய பழக்கவழக்கங்களைத் தவிர்க்கின்றனர் என்பதே உண்மையாகும்.
தாய் தந்தையர் தமது பிள்ளைகளை முதலில் குறைத்து மதிப்பிடுவதை பெற்றோர் நிறுத்தவேண்டும். அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள், இப்படிச் செய்யமாட்டார்கள் என ஒரு நம்பிக்கையை வளர்ப்பதை நிறுத்தி முதலில் எலாவற்றிலும் ஒரு சந்தேகக் கண்கொண்டு, பார்ப்பது நல்லது. அல்லது கொஞ்சமாவது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ! அவர்கள் ஒரு வயதைக் கடக்கும்வரை தான் இந்தப் பிரச்சனை இருக்கும், சுமார் 21 வயதை தாண்டினாலே அவர்களுக்கு பொறுப்பு தானாகவே வந்துவிடும்.
எனவே நோர்வே நாடு மட்டுமல்ல, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் பெற்றோர் தமது பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை எடுக்கவேண்டும். வருங்கால எமது சந்ததிகள் சமூதாயத்தில் நல்லதொரு விருட்சமாக இருக்க நாமே வழிகோலவேண்டும்.
தமிழ் பாடசாலைகள் அனைத்தும் இது குறித்து புதிய கவனம் செலுத்துவது நல்லது. வெறுமனவே சமயத்தையும், நாட்டியத்தையும், தமிழையும் கற்றுக்கொடுக்காமல், எமது சமுதாய பாரம்பரியத்தையும் கற்றுக்கொடுக்கவேண்டும் ! அத்தோடு நின்றுவிடாது எமது ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும், அதற்காக நாம் கொடுத்து விலை குறித்தும் சிறார்களுக்கு அறிவூட்டவேண்டும் ! சில தமிழ் பாடசாலைகள் இது ஒரு அரசியல் எனக் கூறி தமிழர்களின் போராட்டத்தை பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறுத்துவருகிறார்கள்.
ஈழத் தமிழன் என்று சொன்னால் அவர்கள் தனி நாட்டிற்கான போராட்டம், அதில் ஒரு அங்கமாகும். அதனை மறைப்பது எந்தவகையில் நியாயம் ? ஒரு புத்தகத்தில் ஒரு பக்கத்தை மட்டும் கிழித்துவிட்டு அதனை சிறுவனுக்கு படிக்கக்கொடுப்பது போல உள்ளது தற்போதைய நிலை. கிழிக்கப்பட்ட அந்தப் பக்கத்தை படிக்கும் உரிமையும் சிறார்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. ஈழ விடுதலை, எமது இனத்தினை எவ்வாறு பேரினவாதிகள் அடிமைப்படுத்தினார்கள் என்பது குறித்து சிறுவர்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் அவர்களை நாம் வேறுபாதைக்கு எடுத்துச் செல்லமுடியும்.
குடித்து கெட்டு குட்டிசுவராகுவதற்கு பதிலாக, ஒரு நல்ல விடுதலைவேட்கை கொண்ட இளையோராக, எமது இனைத்தை நேசிக்கும் ஒரு நல்ல மனிதராக எமது இளைஞர்களை நாம் மாற்றவேண்டும். அதில் பெரும் பங்கை பெற்றோரும், தமிழ் பள்ளிக்கூடங்களும் ஏற்று எமது இளைய சமுதாயம் தளைக்க வழிகோலவேண்டும் என்பதே இந்தப் பேதை தமிழனின் ஒரு ஆதங்கம்!
நன்றி: அதிர்வு
good god! these things are not possible in tamilnadu! god bless our politicians,police personnels for their consciousness in saving the culture!
தொடர்ந்து பயணிக்க வேண்டும்
வெற்றி பெறவே மனிதர்கள் பிறந்தார்கள் தோற்க அல்ல..
TUESDAY, 5 APRIL 2011
01. வேலை செய்வதே சோகத்தை வெல்ல வழி.. கண்ணீர் விடாது நம்பிக்கையுடன் வேலை செய்தவனே துர்நாற்றம் பிடித்த காடுகளை அழித்து, அழகான வயல்வெளிகளையும், பிரமாண்டமான நகரங்களையும் உருவாக்கினான்.
02. உடலில் உள்ள நேர்மறையான நிலையை, வேலை செய்யும் சக்தியை, தைரியத்தை வெற்றி தந்திருக்கிறது. வெற்றி வரவில்லையே என்று நாம் கவலைப்படக்கூடாது, மேலும் ரோஜாக்கள் வேண்டுமென்றால் நாம் மேலும் பல செடிகளை நடவேண்டும், இதுவே வெற்றிக்கு வழி.
03. ஒரு மனிதன் தான் செய்யும் வேலையில் சந்தோஷம் காண வேண்டும். எந்த வேலையையும் அனுபவித்து செய்தால்தான் சந்தோஷம் காணலாம்.
04. தன் கடமையைக் கண்டறிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகிறான். அவனுக்கு வேறு ஆசீர்வாதம் தேவையில்லை. உழைப்புத்தான் மகிழ்வான வாழ்வு.
05. உங்கள் கடமையில் இருந்து சந்தோஷத்தைப் பெறுங்கள். இல்லாவிட்டால் உண்மையான சந்தோஷம் என்னவென்று உங்களால் அறிந்து கொள்ளவே முடியாது. வாழ்வில் நம்பிக்கையற்று, திருப்தியற்று இருப்பவர்களுக்கு இதில் நல்ல செய்தி இருக்கிறது.
06. கடமையும் கூடவே பிறக்காமல் எந்த மனிதனும் உலகில் பிறப்பதில்லை.
07. ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டியது என்னவென்றால் தன் தொழிலில் முன்னேற முயல வேண்டும், கஷ்டப்பட வேண்டும். அப்போதுதான் தான் தேர்ந்தெடுத்த தொழிலில் சிறப்பான வெற்றி பெற முடியும்.
08. ஒவ்வொருவரும் தொழிலில் தம்மை அர்ப்பணித்து, இயல்பான திறமைகளை வளர்த்து, உச்சகட்ட வளர்ச்சியை அடைய வேண்டும். உன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வாழ்வாயாக என்பதே வாழ்வின் வேதம்.
09. உன் கையில் உளி இருக்கும்போது உனக்கு வேறு எதுவும் தேவையில்லை. ( வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் )
10. உங்கள் கடமையை அன்போடு செய்யாது வெறுப்போடு செய்தால், ஒரு நாள் கோயில் வாசலில் இருந்து பிச்சை எடுக்க வேண்டிய நிலைதான் வரும்.
11. உலகில் நாம் பிறந்தது ஏனென்றால் இந்த உலகத்திற்கான கடமைகளை செய்வதற்குத்தான். அதைச் செய்யாவிட்டால் நாட்கள் மிதமிஞ்சி தேவையற்ற சிக்கலில் மாட்டுப்படுவோம்.
12. நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் பயணம் செய்யுங்கள், பயணம் செய்யுங்கள் இதுதான் கொலம்பஸ்கண்ட நம்பிக்கை மொழி. இருள், பசி, களைப்பு இவைகள் சூழ்ந்தாலும் பயந்துவிடாதே பணயம் செய்..! என்றார்.
13. புயலில் கப்பல் பழுதுபட்டுவிட்டது, மாலுமிகள் கலகம் செய்யப்போவதாக பயமுறுத்தினர், கப்பலின் சுக்கானும் முறிந்துவிட்டது. அத்தருணம் கொலம்பஸ் நடுக்கடலில் மனச்சோர்வு அடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மனம் தளரவில்லை பயணம் செய்தார் இலக்கை அடைந்தார், அமெரிக்காவை கண்டறிந்தார்.
14. பயணம் செல்! பயணம் செல் ! கடலின் ஆர்ப்பரிப்பு அவரின் காதுகளில் கேட்டது. சிதறிய திவலைகள் அவர் கன்னத்தில் தெறித்தன. கொலம்பஸ் என்ற மனிதனின் அசைக்க முடியாத உறுதிக்கு பின்னால் அனைவரும் கட்டுப்பட்டு நின்றனர்.
15. அவனுக்கு முன்னால் கரையற்ற கடல்..
நம்பி வந்தவர்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்தனர்..
வெளுத்து களைத்த மாலுமிகள் பிரேதம் போல ஆனார்கள்..
பயங்கரமான அந்தக் கடலில் இருந்து கடவுளும் விலகிவிட்டார்..
நம்பிக்கை போனால் நாம் என்ன செய்வது ?
பயணம் செய் ! பயணம் செய் ! பயணம் செய் !
அந்த இரவோ இரவுகளில் எல்லாம் இருண்டது !
பிறகு ஓர் ஒளி !
வெளிச்சம் ! வெளிச்சம் ! வெளிச்சம் !
கொலம்பஸ் அன்று உலகை வென்றான்
உலகுக்கு ஒரு பாடம் சொன்னான்..
பயணம் செல் தொடர்ந்து பயணம் செல்..
ஈழத் தமிழா நீயும் கலங்கிவிடாதே
பயணம் செல்..! தொடர்ந்து பயணம் செல்..!
நீயும் கொலம்பஸ்போல சுதந்திர மாலையுடன்
ஒரு நாள் உன் தாய் நாட்டைக் காண்பாய் !
16. தைரியமும் விடா முயற்சியும் இருந்தால் நீ உன் இலட்சியத்தை அடைவாய். எனவே உன் பாதையைத் தீர்மானித்து, அதில் தொடர்ந்து செல் ! என்ன நடந்தாலும் சரி கைவிடாதே.. ! தொடர்ந்து செல் விரைவில் நீ உன் இலட்சியத்தை அடைவாய். இதுதான் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க விரும்புவோர்க்கு கொலம்பஸ் சொன்ன நற்செய்தி.
17. பின்னால் உள்ள எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இப்போது செய்வதில் மூழ்கி உன் இலட்சியத்தில் முன்னேறு.
18. தைரியமும், விடா முயற்சியும் இரண்டு மந்திர தாயத்து போல நம்முள் செயற்பட்டு வரும் துன்பங்களையும் தடைகளைகளையும் அழிக்கின்றன.
19. தீர்மானமான தேவையற்ற வேகம் இல்லாமல் முன்னேறும் ஒருவனுக்கு எந்தப் பாதையும் நீண்டதில்லை. பொறுமையோடு வெற்றிக்காக தயார் செய்து கொண்டிருப்பவனுக்கு அது தொலைவில் இருப்பதும் இல்லை.
20. உறுதியால் அல்ல…! விடா முயற்சியால்தான் உயர்ந்த காரியங்கள் சாதிக்கப்படுகின்றன. ( ஒவ்வொரு ஈழத் தமிழரும் இந்த வரியைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும் )
21. தன் வாழ்நாள் முழுவதும் ஒரே இலக்கை நோக்கி உண்மையாகப் பாடுபட்ட ஒருவன், அதை அடையாமல் போனதாக சரித்திரம் இல்லை.
22. வெற்றிக்கான முழுமையான காரணி விடா முயற்சி.. கதவில் நீண்ட நேரம் ஓசை உண்டாகும்படி தட்டினால் நிச்சயம் ஒரு நாள் யாராவது வந்து திறப்பார்கள்.
23. காலையில் நீங்கள் எழுந்திருக்கிறீர்கள்.. என்ன ஆச்சரியம் உங்கள் கைகளில் மந்திரம் போல 24 மணி நேரம் நிரம்பி இருக்கிறது. அதுதான் உங்கள் செல்வங்களில் சிறந்த செல்வம்.
24. நேரம்தான் விலைமதிப்பற்ற பொருள், அதுதான் வாழ்வின் விலை மதிப்பற்ற சாறுள்ள தசையாகும்.
25. சுய ஒழுக்கமுள்ள கட்டுக்கோப்பான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, விலை மதிப்பற்ற நேரத்தை சிறிதும் வீணாக்காமல், முட்டாள்தனமாக மிதமிஞ்சி செலவு செய்யாமல், முன்னேற்ற முனைப்புடன் செயற்படுத்து. ஒவ்வொரு மணி நேரமும் ஓர் உபயோகமான நோக்கத்திற்கு பயன்பட வேண்டும்.
இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் வெறுமனே வாசித்துவிட்டுப் போகாது இதன்படி நம்பிக்கை மனிதர்களாக வாழ வேண்டும். போராட்டத்தின் சரி, தவறு, தோல்வி, வெற்றி எல்லாவற்றையும் தாண்டி உற்சாகமாக நடவுங்கள்.. ஏனென்றால் உங்கள் இதயத்தில் விடிவு வந்தால்தான் நாட்டில் விடிவின் ஒளி விழும்… அதற்கு நன்கு திட்டமிட்டு, நேரத்தை நாசமாக்காது, தொடர்ந்து பயணிக்க வேண்டும் கொலம்பஸ்போல.
Subscribe to:
Posts (Atom)
