மகனே! சௌக்கியமா? பின்னாலிருந்து கேட்டது ஒரு குரல்.
தகிக்கும் பாறையில் அமர்ந்துகொண்டிருந்து கடலையே பார்த்து எதையோ விரக்தியாக சிந்தித்துகொண்டிருந்த அவன், குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தான்.
வாருங்கள் இறையனாரே! இப்படி அமருங்கள் என்று கூறியபடி மீண்டும் கடலை நோக்கி பார்த்தபடி சிந்திக்கலானான்.
கடவுள், " என்ன மகனே, என்னையும் பொருட்படுத்தாது, அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனை?" என்று கேட்டபடி பாறையில் அமர்ந்தார்.
பதிலேதும் கூறாமல் நீலக்கடல் நீலவானை சந்திக்கும் புள்ளியை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
"என்ன மீண்டும் ஏதாவது பிரச்சினையில் சிக்கிக்கொண்டாயா?'' சொல்! நான் தீர்த்துவைக்கிறேன்"
கடவுளை பார்த்து முறைத்தபடி, "இறையனாரே! வந்த வேலையை பார்த்துவிட்டு செல்லும்! தேவையற்ற சொற்களை பேசி எமது வாயை கிண்டாதீர்!"
என்ன பழையபடி ஏதாவது சிக்கலா, என கேட்டார், கடவுள்
"ஐயனே! பழையபடி என்றால்?" கேள்வியை முடிக்காமலே அவரைபார்த்து முறைத்தான் .
சொல்லாமல் அவன் முகத்தையே பார்த்தபடி, "இல்லை! இல்லை! கண்டிப்பாக இருக்காது! இந்த பன்னிரண்டு வருடங்களில் நீ சிறிது பக்குவப்பட்டவனாக ஆகியிருக்கிறாய், என்னை மாமா என்றெல்லாம் அழைத்த நீ இப்போது ஐயனே என்றெல்லாம் மரியாதையெல்லாம் தருகிறாய்! பரவாயில்லை; உனக்கு அறிவு முதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன்!"
உள்ளத்தில் பொங்கி வரும் எரிச்சலை அடக்கியவாறே, " "இறையனாரே மிக்க மகிழ்ச்சி! நன்றி! என்றான் முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி.
கடவுள் எழுந்து நின்றபடி, எழுந்திரு! என்றார்
சத்யா எழுந்து நின்றான்! என்ன சொல்லுங்கள்!
ஏன் விட்டேற்றியாகவே பதில் சொல்லுகிறாய்? என்ன ஆயிற்று உனக்கு? என்றார் கடவுள்.
முதல் முறையாக சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான் அவன்!
கடவுள் அவனை சற்று பிரமிப்புடன் பார்த்தபடி, மகனே! நீ சிரிப்பதை பார்க்கும் போது எனக்கு மகிழ்வாக இருக்கிறது!"
ஏளனமான புன்னகையுடன், அவன் கடவுளை பார்த்து, "இறையனாரே! தங்களுக்கு மிக்க வந்தனம்! இங்கே தங்களுக்கும் ஏதும் வேலை இல்லை எனில் தாங்கள் செல்லலாம்.
ஏன் உமக்கு ஏதாவது முக்கிய வேலை இருக்கிறதா என்ன? கடவுள் கேட்டார்
ஆம்!
தனிப்பட்ட வேலையோ?
ஆம்
பணம் சம்பாதிப்பதைப்பற்றியோ? அல்லது மக்கட்சேவை தொடர்பானதோ?
எதுவாயிருந்தால் உனக்கென்ன ஐயனே! என்னால் முடிந்த எதையோ நேர்மையாக செய்துவிட்டு போகிறேன்! வந்தால் மடு போனால்....! என்று முடிக்காமல் நிறுத்தினான்
"மயிர்!................ஏன் பழமொழி மறந்துவிட்டதா மகனே! அதென்ன மலைக்கு பதிலாக மடு?கடவுள் சிரித்தபடி கேட்டார்
ஆமாம்! எமக்கு பணத்தாசை கிடையாது! மடுவளவில் வந்தாலே போதும்!
நீ பொய் சொல்கிறாய்! உனக்கும் பணத்தாசை உண்டு! சொகுசாக வாழவேண்டும் என்ற எண்ணம் உண்டு" என்றார் சற்று கடுப்புடன் அவனை பார்த்து கடவுள்.
கடவுளின் சுடுசொற்களை கேட்டு நெஞ்சில் உண்டான மிகுந்த துயரத்தை மறைத்துகொண்டு, " இறையனாரே! அப்படி நீர் நினைக்கிறீர் என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை! நான் கிளம்புகிறேன்! என்று கூறியபடி அவ்விடத்தை விட்டு அகல ஆயத்தமானன். உடைகளில் ஒட்டியிருந்த மணற்துகள்களை தட்டிவிட்டு வேட்டியை மடித்து கட்டிநடக்க ஆரம்பித்தான்.
"நில்!" கடவுளின் அதட்டலான குரலை கேட்டு எந்தவிதமான பயமும் பதற்றமும் இன்றி திரும்பி பார்த்தான்!
"நீ இப்போதெல்லாம் என்னை மதிப்பதில்லை! நான் பள்ளி கொண்ட கோயில் கும்பாபிஷேகத்திற்கு கூட நீ வரவில்லை!" அதுமட்டுமில்லை! பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நாம் சந்த்தித்தபோது நீ என்னை மாமா என்றழைத்து என்னையும் மக்களையெல்லோரையும் சிரிக்க வைத்தாய்! பெரிய கார்யங்களை அநாயசமாக செய்தாய். ஆனால் இப்போது ஐயனே! என்கிறாய். சோம்பேறியாக அறையில் அடைந்து கிடக்கிறாய்! தொடர்ந்து கர்ஜித்தார் கடவுள்!
அவன், மெல்ல புன்னகையுடன், "இறையே! உம்மை மாமா என்றழைததெல்லாம் வயது முதிர்ச்சின்மையின் காரணமாக இருக்கலாம். அல்லது தோழமை காரணமாக இருக்கலாம்!
ஏன் இப்போது தோழமை காணாமற்போய்விட்டதோ?
தோழமை வற்றிவிட்டது, ஐயனே! நீர் நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டீர்"
இல்லை இல்லை நான்தான் வெகு தொலைவுக்கு சென்றுவிட்டேன் என்று கூறியபடியே மணலில் அமர்ந்து மீண்டும் கடலை வெறித்து பார்க்கலானான்.
ஏன் மகனே? என சற்று நெருங்கி வந்து அமர்ந்தபடி பரிவுடன் கேட்டார்.
அவன் சற்று நகர்ந்து அமர்ந்தபடி, இறையே! நீர் இருந்த இடத்திலேயே இரும்! நான் இருக்கும் இடத்தில் நான் இருந்துகொள்கிறேன்! நீர் நெருங்கி வரவேண்டாம்!
ஏன்! நான் நெருங்கி வந்தால் மரணம் நெருங்கிவிடும் என அஞ்சுகிறாயோ என நகைப்புடன் கேட்டார் கடவுள்!
மரணத்துக்கெல்லாம் அஞ்சுபவன் இந்த மனிதனில்லை!
ஆம்! நானறிவேன்!
ஓ! அதனால்தான் என்னை சுற்றியிருப்பவரை குறிவைக்கிறீறோ? என்ன பிழைப்பு இது ஐயனே!"
அட! நீ சகஜ நிலைக்கு வந்துவிட்டாய்! மகிழ்ச்சி! நான் யாரையும் குறிவைக்கவில்லை! அவர்களாகவே தங்கள் கர்மாவின்படி துன்பங்களை அநுபவிக்கின்றனர். மூடத்தனத்தில் சிக்குண்டு தவிக்கின்றனர். நான் செய்ய இதில் என்ன இருக்கிறது, மகனே!?
சப்பை கட்டு வேண்டாம்!
அப்படியென்றால்?
கேள்விக்கு பதில் சொல்லாமல் நீர் சமாளிக்க பார்க்கின்றீர்!
என்ன கேட்டாய்?
என் அருகில் இருக்கின்றவர்களை சிக்கல்களில் மாட்டிவிடுகிறீர்.
எல்லோரையுமா?
இல்லை சிலரை!
அதைப்பற்றி உனக்கென்ன கவலை? நீ உன் வேலையை சரியாக பார்த்துகொண்டு போ!
பள்ளத்தில் விழ இருப்பவரை தடுத்தால் எனக்கு பைத்தியக்காரன் பட்டம் கட்டுகிறார்கள்.
உனக்கு இரக்க சுபாவம் அதிகம். சில சமயங்களில் அது எல்லை மீறுகிறது! அவர்கள் கர்மா உன்னை பிடித்துகொள்கிறது! நீ அதை சமன் செய்ய உன் ஆன்ம சக்தியை செலவிடுகிறாய். இப்போது உன்னால் இயலவில்லை. அதுதானே உன் பிரச்சினை!
அதுமட்டுமல்ல! வேறொரு பிரச்சினையும் இருக்கிறது ஐயனே!
உன் அனைத்து பிரச்சினைகளும் அகன்று விட்டன, மகனே! நீ விழித்துகொண்டுவிட்டாய்! இனி வெற்றிப்பரிசுகள் உன்னை தேடி வரும், மகனே! எழுந்து உன் வேலைகளை சரிவர செய். அதுபோதும்!
அவன் கடவுளை உற்று பார்த்தபடி, "நான் மாயாஜாலங்களில் நம்பிக்கையற்றவன் இறையனாரே!"
தெரியும்! அதனால்தான் நீ என்னை தேடி வராவிட்டாலும், உன்னை தேடி நான் வருகிறேன்!
நீர் என்னை வெற்றி பரிசுகள் தேடி வரும் என்று கூறியது யாரை குறிவைக்கிறீர் என தெரிந்துகொள்ளலாமா?
கடவுள் சிரித்தபடி எழுந்தார்! சந்தேகப்பேய் மட்டும் சிறிது உன்னிடம் இன்னும் இருக்கிறது. மற்றபடி நீ முழுமையடைந்துவிட்டாய் மகனே!
அப்படியானால் நான் முழுமையடையாமல்தான் இத்தனை நாட்கள் இருந்தேனா? என்னுடைய எல்லா துன்பங்களுக்கும் நான்தான் காரணமா? நானா பிரச்சினைகளை தேடி செல்கிறேன்?
நீ தேடி செல்லமாட்டாய் என்று தெரிந்ததால்தானே பிரச்சினைகளை உன்னிடம் அனுப்பி வைக்கிறேன்! என கூறியபடி சிரித்தார்!
கடுப்புடன் சரி பாஸ்! எப்ப கிளம்புறீங்க? என்றான்
என்ன ''பாஸா" ?
ஆமாம் கடவுள் மாதிரி பேச வேண்டியவர் கடத்தல் கும்பல் தலைவன் மாதிரி பேசினால் வேறெப்படி அழைப்பது? இனிமேல் நானும் உஷாராக இருந்துகொள்கிறேன்.
நீ உஷாராகதான் இருந்தாய்! ஆனால்,.....
என்ன ஆனால்....? சத்யா கேட்டான்
கடவுள் பெருமூச்சுவிட்டபடி, நீ ரொம்ப நல்லவனாக இருக்கிறாய்!
என்ன இறையனாரே? கிண்டல் செய்கிறீர்? ரொம்ப நல்லவன் என்றால் என்ன பொருள் தெரியுமா?
நெற்றியை சுருக்கியபடி, "என்ன பொருள்?" என கேட்ட கடவுள் கண நேரத்தில் மறைந்து திரும்பிய கடவுள் சிரித்தபடி, மகனே! நீ உண்மையிலேயே ரொம்ப நல்லவன்தான்! என சொல்லியபடி அவனை கருணையுடன் பார்த்தார்!
நான் நம்ப முடியாது! என அவன் சொல்ல அதற்கு கடவுள், ' அந்த சந்தேகப்பேயை மட்டும் துரத்து! நீ மீதமுள்ள காலத்தை மகிழ்ச்சியுடன் வாழ்வாய்! என்றார்
சந்தேகம் என்ற ஒன்று இருந்ததால்தான் இன்றளவும் பல விஷயங்களை புரிந்துகொள்ள முடிகிறது, ஐயனே! அறிவு வளர்ச்சிக்கு சந்தேக படவேண்டும்!
நிரம்ப சரி! ஆனால் உனக்கு நல்லது செய்ய நினைக்கும் என் செயல்களை மட்டும் சந்தேகப்படாதே!
அவர் சொன்னதை கவனிக்காமல் விரக்தியான பழைய பார்வையுடன் கடலை வெறிக்க தொடங்கினான்!
மகனே! நான் சொன்னதை கவனிக்கின்றாயா?
அவன் ஆழ்கடலை வெற்றுப்பார்வை பார்த்துகொண்டிருந்ததைப்பார்த்து ஒரே கணத்தில் ஆழ்கடலை பசும் சோலையாக மாற்றினார். அங்கே ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகள் சீருடை அணிந்து விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்தான்!
கடவுளை நோக்கி திரும்பினான்! அங்கே கடவுள் மாயமாகிவிட்டிருந்தார்!
திரும்பி அந்த பசுஞ்சோலையை பார்த்தான். அங்கே ஆழ்கடலின் அமைதியான அலையோசை அவன் மனதை தாலாட்ட ஆரம்பித்தது.
இவன் இப்போது அந்த இறுதி நேர மாயாஜால காட்சிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பான், சந்தேகப்படுவான்! வழக்கம்போல் தனியே விடைகளை காண முயற்சிப்பான். அவன் முயற்சிகள் வெல்லட்டும்!
No comments:
Post a Comment